இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

தெய்வங்களிடம் எதற்கு ஆயுதம்? பகவானின் ஆயுதப்பட்டியல்

பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு? சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது

தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்?


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 59 – 60 -- 61.

பகுதி - 59.  கொலு தத்துவம் பற்றி பார்த்து முடித்தோம். கொலு என்பது உண்மையில் பெண்தெய்வங்களைப் போற்றிப் புகழ்வதற்கா? அல்லது பெண் தெய்வங்களை சிறுமைப்படுத்தும் சடங்கா என்பதை விளக்கிக்கொண்டிருப்பீர்கள்.

ஒருவேளை.... இது பெண்களைப் போற்றிப்புகழும் சடங்கு என்றே வைத்துக் கொண்டாலும்... கொலு, கோயில்களில் வைக்கப் படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அய்தீகம்.

ஒருவேளை பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளேயே வைத்துப் போற்றிக்கொள்... வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ?

சரி... கொலுவின் ரிஷிமூலமாக நாம் பார்த்தோமல்லவா? மன்னர்கள் தங்கள் படைகளை, படைக்கலன்களை வழிபாடு செய்வார்கள் என்று அந்த செய்கையிலிருந்து நம்பிக்கையாக, வழக்கமாக உருமாறியதுதான் ஆயுத பூஜை.மன்னன் மட்டுமன்றி அவனது தேசத்திலுள்ள பிரஜைகளையும் அவன் செய்ததை பின்பற்றினார்கள்.

மன்னனுக்கு போர் செய்வது ஒரு தொழில். அதனால் அவன் யுத்த தளவாடங்களை வழிபட்டான். அதுபோல்... ஒவ்வொரு பிரஜையும் தான் என்ன தொழில் செய்கிறானோ அந்த தொழில் செய்ய பயன்படும் உபகரணங்களை வைத்து வழிபாடு செய்தான்.

அந்தக்காலத்தில் பிராமணர்களுக்கு என்ன தொழில்? இந்தக் கேள்விக்கான பதிலை நாம் இத்தொடரின் 11-வது அத்தியாயத்திலேயே பார்த்திருக்கிறோம். அதாவது... யஜனம், யாஜனம் இரண்டுதான் பிராமணர்களின் தொழில் மந்திரம், ஹோமம், யாகம் ஆகியவற்றை பண்ணுவது, பண்ணுவிப்பது இதுதான். அப்படியென்றால் ஆயுதபூஜை என்று எதை வணங்க முடியும்?

யோசித்துப் பார்த்தார்கள் ஆயுத பூஜையை அப்படியே சரஸ்வதி பூஜையாக்கிவிட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கிளைக் கேள்வி முளைக்கிறது.

ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே தேவையாக இருந்தது. இருக்கிறது. தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்கவேண்டும். பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு?

நாம் இன்னும் தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்? இதற்கான பதிலை வேதத்திலிருந்து தொடங்கி பார்த்தால் நமக்குத் தெளிவான பதில் கிடைக்கும்.

வேதத்தில் தெய்வங்களை இரண்டு வகையாக பிரித்துப் பார்த்திருக்கிறார்கள் ரிஷிகள்.

“ருத்ரோவா ஏஷஹ அக்னிஹிதஸ்யைதே தனுவஸ் கோரான்யசிவான்ய யச்சதயதுசத ருத்ரியஞ்ஜோதி யதேவாஸ்து கோராதனுதாம்தேன சமயதீ யத்வஸோர் தாதாம் தியோதீயைவாஸ்ய சிவாகனு தாந்தனே ப்ரினாதீ...”

இந்த வேத மந்த்ரம் என்ன சொல்கிறது. தெய்வத்தின் இயல்பைச் சொல்கிறது. அதாவது “Character of God” வேதகாலத்தில் ரிஷிகள் யாகம் பண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் போது... பெருங்காற்று காதை கிழிக்கும், மனசை உலுக்கும் சத்தத்தோடு அடிக்கிறது. ரிஷிகள் பயந்து சாகிறார்கள்.

‘அய்யோ ருத்ரன் வந்துவிடுவானே... அவன் கொலைகார தேவதையாச்சே... எல்லாவற்றையும் துவம்சம் பண்ணிவிடுவானே...’ என அலறுகிறார்கள்.

உடனே, ருத்ரனை நினைத்து...ருத்ரா உன் கோபத்துக்கு ஒரு நமஸ்காரம்ருத்ரா என் கோரத்துக்கு ஒரு நமஸ்காரம் ருத்ரா உன் குரூரத்துக்கு ஒரு நமஸ்காரம் உனக்குப் பயந்து உன்னைப் போற்றுகிறோம். நீ இங்கே வராதே. ஓடிப்போய்விடு...’ என்று ருத்ரனை விரட்டுவதற்காகவே அவனை போற்றுகிறார்கள்.

அந்த வேதமந்திரம் விளக்குவது இதைத்தான்.அதாவது ருத்ரன் பார்க்கவே கோரமாக கொடூரமாக இருப்பான். அவனது வேலை மக்களுக்கு கெடுதல் செய்வதுதான். ‘ருத்ராஹா குரூரஹா’ என்றது வேதம். ருத்ரன் அயோக்கியன்.‘சக்ஸ்ரானி, சகஸ்ரஸ்ய ருத்ரானி பூம்யாம்’

அதாவது இந்த லோகத்தில் ஆயிரமாயிரம் ருத்ரர்கள், (அயோக்கியர்கள், கொடுமைக்காரர்கள்) இருக்கின்றனர். அதனால்? “அந்த ஏவ ருத்ரன் நிரவதேதே...” ‘சயனம்’ என்றொரு யாகத்தை நடத்த எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது ருத்ரன் தலையை விரித்துப்போட்டுக் கொண்டு கையில் தனுஸ்... பாணத்தோடு வருகிறான்.

இங்கேதான் கவனிக்கவேண்டும்.வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே ஆயுதம் தனுஸ்-பாணம் தான். இது ருத்ரனின் கையில் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அவன்... யாகத்தை குலைப்பான். சோகத்தை உருவாக்குவான். சத்(நல்ல) விஷயங்கள் செய்து கொண்டிருக்கும் இடத்தில் வில்லை எடுத்துக்கொண்டு வந்து எல்லாரையும் விரட்டுகிறான்.

இப்படியெல்லாம் ருத்ரன் தாண்டவம் ஆடும் முன்னமேயே... அவனை மந்த்ரம் மூலம் போற்றி மந்த்ரத்தால் அடித்து விரட்டு என்பதைத்தான் ‘அந்தத ஏவ ருத்ரன் நிரவதேதே....’ என்கிறது வேதம்.இப்படிப்பட்ட, அயோக்கியன், திருடன், குரூரன், பெருங்காற்றின் தகப்பனார் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ருத்ரன் கையில் தனுஸ்-பாணம் (வில், அம்பு) என்ற ஆயுதம் இருந்தது. அதே நேரம் ருத்ரனுக்கு இன்னொரு சாந்த வடிவமும் இருக்கிறது. அன்பே உருவான, கருணையே சொரூபமான அவன்?....

பகுதி – 60.  வேதத்தில் கொடுமைக்காரனாக சித்தரிக்கப்பட்ட ருத்ரனின் இன்னொரு வடிவான சாந்தரூபன், கருணை சொரூபன் யார்?...விஷ்ணு !

வேதம், அழகு என்பதை அத்புதம் என்னும் வார்த்தையால் வடித்துக் கொடுக்கிறது. அது பிற்பாடு நம் பாஷையில் அற்புதம் என்று மயங்கி மருவிற்று. ‘சதசத்பதி அத்புதம்....’ என்கிற மந்த்ர வார்த்தைகள் விஷ்ணுவை Leader of the Society ஆக சித்தரிக்கின்றன.சமுதாயத்தின் தலைவனான நீ அழகாக சாந்தமாக இருக்கிறாய் என்கிறது வேதம்.

இன்னொரு இடத்தில்...‘தொம்ஹி சத்யோ அத்புதஹா தாதா வாஜஸ்ய’....அதாவது நீ உண்மையான அழகுள்ளவனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.

வேதப்படி கடவுளுக்கு உருவம் இல்லையென்றீர்களே... பிறகு எப்படி ஆயுதம், அழகெல்லாம் வந்தது? என உங்களுக்கு சந்தேகம் முளைக்க வேண்டும். அதே வேதம்தான்...’நீ நினைத்தால் கடவுளுக்கு உன் இஷ்டப்படி உருவம் கற்பிதம் செய்துகொள்’ என்று கூறியிருக்கிறதே!

சரி... வேதம் சொன்னதுபோல் ருத்ரனுக்கு வில்-அம்பு ஆயுதம். ருத்ரன் போன்ற கொடுமைக்காரனே வில்-அம்பு மட்டும்தான் வைத்திருந்தான் என்றால்... சாந்த சொரூபி... கருணை வடிவான விஷ்ணுவுக்கு பட்டு பீதாம்பரம், ஜொலிக்கும் நகைகள் மட்டும்தானே உடைமைகளாக இருக்கவேண்டும்.

ஆனால்... ருத்ரன் போன்ற குரூரனுக்கே இல்லாத வகையில் பஞ்சாயுதம் தரித்திருக்கிறார் விஷ்ணுபஞ்சு ஆயுதமா?... ஆமாம் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை. ஆமாம் விஷ்ணுவின் கைகளில் அய்ந்து ஆயுதங்கள்.சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம்! ஒவ்வொன்றாய் விளக்குகிறேன்.

சங்கு... அந்தகாலத்தில் Premetive Culture காலத்துப் பழக்கப்படி சண்டை போடச் செல்லும்போது... ‘நாம் சண்டைக்கு தயார்... புறப்படட்டும் நமது பரிவாரங்கள்’ என்று சமிக்ஞை கொடுப்பதற்காகவும்... டேய்... என் படை கிளம்பி விட்டதடா... என எதிரிக்கு சவால் விடுவதற்கும்தான் சங்கு ஊதுவார்கள். அதேபோல் எல்லாம் முடிந்தபின்னரும் சங்கை ஊதி முடிவை தெரிவிப்பார்கள்.

சண்டை ஆரம்பித்து முடியும் வரை உபயோகப்படும் சங்குதான் சாந்த சொரூபியான விஷ்ணுவின் முதல் ஆயுதம்.அடுத்தது சக்கரம்...வேதத்தில் முக்யத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ள அக்னியின் அம்சம்தான் இந்த சக்கரம். சக்கரத்தை ஏவினால் அதிலிருந்து கக்கப்படும் நெருப்பு எதிரியைக் கொளுத்தி வேகவைத்து சாகவைத்துவிடும்.

இதுதான் அழகான விஷ்ணுவின் அடுத்த ஆயுதம். சக்கரத்துக்கு இன்னொரு விசேஷம் உண்டு. அதை அய்ந்து ஆயுதங்கள் பற்றி விளக்கி விட்டு தனியாகச் சொல்கிறேன். மூன்றாவது ஆயுதம் கதை (Gadha). இதுவும் Premetive Culture காலத்து... அதாவது ஏறத்தாழ காட்டுமிராண்டிகள் பயன்படுத்திய ஆயுதம்தான். பெரிய மரக்கட்டை அடித்தால் ஒரே அடியில் மோட்சம்தான். அப்படிப்பட்ட கட்டைதான் இது.

இன்றும் செய்தித்தாள்களில்.... ‘உருட்டுக் கட்டையால் அடித்து ஒருவர் பலி’ என்று கொட்டை எழுத்தில் செய்தி பிரசுரம் பண்ணுகிறார்களே. அந்த உருட்டுக் கட்டைதான்.

கிராமப்புறங்களில் சுக்குமாந்தடி என பயத்தோடு அழைக்கப்படும் ஆயுதம் தான் கதை (Gadha). நான்காவது சாரங்கம் அதாவது வில்... இதுவும் பழங்காலத்தில் காட்டில் உள்ளவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதம்.

அய்ந்தாவது கட்கம், ‘தனியாய் போன ஸ்த்ரீயை கத்தியை காட்டி தங்கச் சங்கிலி பறித்தான் திருடன்’ என்று News paper களில் வாசிக்கிறோமே... கத்திதான் கட்கம்.இப்படியாக அய்ந்து ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருப்பவர்தான் ருத்ரனின் சாந்த வடிவமான விஷ்ணு.

இதில் சக்கராயுதத்துக்கு மட்டும் பெரிய விசேஷம் உண்டு என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அது என்ன விசேஷம்? பகவான் விஷ்ணுவின் சங்கல்பம்தான் சக்கரம். அதாவது, சுதர்ஸனர் என மரியாதையாக அழைக்கப்படும் ஆயுதம். பகவான் நாராயணன்தான் நினைப்பனவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்காகவே சுதர்ஸனரை வைத்திருக்கிறார். பகவான் எண்ணியதை எல்லாம் சுதர்ஸனர் (சக்கர ஆயுதம்) நடத்தி முடிக்கிறார்.

இவ்வாறு... ஒரு ஆயுதத்துக்கு இவ்வளவு அந்தஸ்து தந்துள்ளது. நமது சம்ப்ரதாயம்.சுதர்ஸனருக்கு இன்னொரு சீரும் சிறப்பும் உண்டு.என்ன?...

“யஸ்மின் விண்யஸ்யபாரம் விஜயினீஜகதாம் ஜங்கமஸ்தாவரணாம் லக்ஷ்மி நாராயணாக்யம் மிதுனம் அனுபவதீ உதிஉதாரன் விஹாரான்ஆரோக்கியம் பூதிமாயுஸீம்க்ருதமிஹ பஹீனா...” சுதர்ஸன ஸதகம் என்றும் புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கடைசி ஸ்லோகம் இது. இதை பண்ணியவர் சுரநாராயண ஜீயர்.

சரி... இந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது?  நாராயணன் பல காரியங்களைக் கவனித்து வருகிறார். இதனாலேயே தன் மனைவியான லட்சுமியோடு அதிக நேரத்தை அவரால் செலவிட முடிகிறதில்லை.

ஆனால்... பகவான் தன் பத்தினியான லட்சுமியோடு உல்லாசமாக பொழுது போக்குவதற்கு... Relax செய்வதற்காக லட்சுமியோடு தனியாகச் செல்லும்போது எல்லா பொறுப்புகளையும் தன் முக்கிய ஆயுதமான சுதர்ஸனரிடம் தான் கொடுத்து விட்டுப் போகிறார்.

இதைவிட விசேஷம்... இந்த சுதர்ஸன ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்கள் இருக்கின்றன.என்னது? ஆயுதத்தின் கையிலும் ஆயுதங்களா?


பகுதி - 61.  என்னது ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்களா? அப்படியென்hல் சுதர்சனர் என்ற சக்கராயுதத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் பாருங்கள். அந்த ஆயுதத்தை அது இது என்று குறிப்பிடாமல் அவர் இவர் என்ற மரியாதை விகுதியுடன் அழைக்கின்றனர். ஆமாம் சக்கரத்தாழ்வார் என நாமகரணம் சூட்டப்பட்டது சுதர்சனத்துக்கு. சமஸ்கிருதத்தில் அப்படியே சுதர்சனர் என்று மரியாதை கலந்து பெயர் சூட்டினார்கள்.

பெருமாளின் கையில் இருக்கும் சுதர்சனரின் கையில் 16 ஆயுதங்கள். பெருமாளுக்கே பஞ்சாயுதம்தான். ஆனால் இவருடைய ஆயுதத்துக்கு 16 ஆயுதங்கள்.

என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்னர்... பெருமாள் சுதர்சனத்தை கையில் வைத்துக்கொண்டு செய்த சாகசங்களில் ஒரு சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

பவுண்டரக வாசுதேவன் என்னும் மன்னன். காசியை ஒரு காலத்தில் ஆண்டவனாம். அவனுக்கு தன் பெயரின் மேல் அலாதி பற்று. அந்தப் பற்று கொஞ்சம் கொஞ்சமாக கர்வமாயிற்று. கர்வம் தலைக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு அவனை அழிச்சாட்டியம் பண்ண வைத்தது. அவன் என்ன நினைத்தான் என்றால் என் பெயரில் வாசுதேவன் என்று வருகிறது. அதனால் வாசுதேவனாகிய விஷ்ணு நான்தான். நானே கடவுள். என் முன் அந்த விஷ்ணு கைகளில் பஞ்சாயுதம் தரித்துக் கொண்டு நிற்கக்கூடாது. அவன் கடவுள் அல்ல. இந்த உலகத்தை ரட்சிக்க வந்த கடவுள் நானே.

அதனால்... அடே விஷ்ணு... உன்னுடைய சங்கு சக்கரத்தை நீ விட்டுவிட வேண்டும். என்னிடம் ஒப்படைத்து விடவேண்டும். ஏனென்றால் உண்மையான வாசுதேவன் உண்மையான விஷ்ணு நான்தான் என கர்வம் தலைக்கேறி குதித்தான் வாசுதேவன்.

விஷ்ணு பார்த்தார்... சங்கு - சக்கரத்தையா கேட்கிறாய்? முதலில் சக்கரத்தை தருகிறேன் வைத்துக்கொள்... கையில் அல்ல... கழுத்தில் வாங்கிக்கொள் என தனது சக்கராயுதத்தை ஏவினார் விஷ்ணு. அந்த சக்ராயுதம் பவுண்டரக வாசுதேவனின் கழுத்தில் இறங்கியது. ``நான்தான் கடவுள், உன் ஆயுதத்தைக் கொடு’’ என்றவனுக்கு தன் சக்ராயுதத்தைக் கொடுத்து அவன் உயிரை எடுத்தார் விஷ்ணு.

இது ஒரு சாகசம் என்றால்... இன்னொன்று... விஷ்ணுவாகிய கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது.

சிசுபாலன். இவன் யாரென்றால்... சேதி நாட்டு அரசன். இவன் கிருஷ்ணனோடு விரோதம் புரிந்தே வந்தான். கிருஷ்ணரை திட்டிக் கொண்டே வந்தான். விஷ்ணுவாகிய கிருஷ்ணர் நூறு திட்டுவரை பொறுத்துக் கொள்ளலாம் என்று இருந்தார். சிசுபாலனின் திட்டு மொழிகளும் நூறை கடந்தன.

கடைசியாய் ``போடா இடைப்பயலே...’’ என கிருஷ்ணரின் ஜாதிப் பெயரை சொல்லி திட்டினானாம் சிசுபாலன். அதுவரை பொறுத்த கிருஷ்ணன் சாதிப் பேரை சொல்லி திட்டுகிறாயே...? என கோபப்பட்டு - சுதர்சனத்தை தன் சக்ராயுதத்தை எடுத்தார்... சிசுபாலனின் தலையை கழுத்திலிருந்து கத்தரித்து கீழே விட்டெறிந்தார்.

இந்த சிசுபாலன்தான், வைகுண்டத்தின் துவாரபாலகர்களில் ஒருவராம். விஷ்ணுவே இவனுக்கு மோட்சம் அளிக்கிறாராம். எப்படியென்றால்... ``டேய்... நீ என் நண்பனாக இருந்து தாமதமாக மோட்சம் பெறுகிறாயா? அல்லது எனக்கு எதிரியாக மாறி உடனே மோட்சம் பெறுகிறாயா? எது வசதி...?’’ என சிசுபாலனிடம் கேட்டாராம் விஷ்ணு. எதிரியாகவே இருந்து சீக்கிரம் மோட்சம் பெற்று விடுகிறேன் என்கிறான் சிசுபாலன்.

ஆக... கடவுளின் நண்பர்களைவிட எதிரிகளுக்குத்தான் மோட்சம் விரைவில் கிடைக்கும் என்பதை விஷ்ணுவே சொல்லியிருக்கிறார். இது பாகவதத்தில் வருகிறது.

தவிர, சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது இக்கதை.

கூடவே சக்கராயுதத்தின் சாகசத்தையும் காட்டுகிறது. சக்கராயுதத்தைப்பற்றி இன்னொரு குறிப்பும் உண்டு. இந்திரனுடைய வஜ்ராயுதம் ததீசு முனிவருடைய எலும்பை எடுத்து உடைத்து செய்யப்பட்டது. அந்த மனித எலும்பு ஆயுதத்துக்கு சக்தி கொடுத்ததே இந்த சக்கராயுதம்தான்.

சரி... சக்கராயுதத்தின் சாகசக் கதைகளைப் பார்த்தோம். 16 ஆயுதங்கள் என்று சொன்னீர்களே... அது என்ன என்று கேட்கிறீர்களா?

பகவான் விஷ்ணுவின் ஒரு ஆயுதமான சக்கரத்தின் இரு பக்கம் எட்டெட்டு கைகளிலும் தலா 8 ஆயுதங்கள். இதைப்பற்றி வேதாந்த தேசிகனே ``சோடஸ ஆயுத ஸ்தோத்ரம்’’ என்று பண்ணியிருக்கிறார். அதாவது 16 ஆயுதங்கள் பற்றிய ஸ்தோத்தரம். ஆயுத ஸ்தோத்திரத்தில் என்னென்ன ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?

சுதர்சனத்தின் வலது கைகளை முதலில் பார்ப்போம்.
1. சக்கரம் 2. மழு 3. குந்தம் (ஈட்டி) 4. தண்டம் (தடி) 5. அங்குசம் 6. சதாமுகாக்னி (ஒரே நேரத்தில் நூறு வாய்களிலிருந்து அக்னி உமிழும் ஆயுதம்) 7. மிஸ்க்ரிஸம் (கத்தி) 8. வேல்.

இவையெல்லாம் வலது கைகளில் உள்ள ஆயுதங்கள்.
அப்புறம் இடது கையில்,  1. பாஞ்ஜ சண்யம் (சங்கு) 2. சாரங்கம் (வில்) 3. பாசம் (கயிறு) 4. கலப்பை 5. வஜ்ராயுதம் 6. கதை (குண்டாந்தடி) 7. உலக்கை 8. திரிசூலம்.
மொத்தம் எட்டெட்டும் பதினாறு ஆயுதங்கள் ஆயிற்றா...?
பதினாறும் பெற்று பகவான் பெருவாழ்வு வாழ்வது இதுதானோ...?

வேதத்தில் சாந்த சொருபியாக காட்டப்பட்ட விஷ்ணு என்ற பகவானை இப்படி பட்டறைக்காரர் போல ஆயுதம் தரிக்க வைத்துவிட்டார்களே...யார்...? ஏன்...? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 57 – 58. இதுதானப்பா நவராத்திரி--நதிமூலம், ரிஷிமூலம், உண்மையான மூலம்.

பகுதி 62 – 63 – 64. யாகங்களுக்கான‌ சம்பளமாக‌ ராஜ பெண்களிடம் ராஜசுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்பிய‌ பிராமணர்கள். யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன? பாவம் என்றால் என்ன? பாவத்தை நிவர்த்தி செய்ய ?

No comments:

Post a Comment