இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.

பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்...
 மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.
இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது


இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 38

பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்... மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை எங்கே கொண்டுபோய் கொட்டுவது என யோசித்தான்.

யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரீ ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி பிரவேசித்தான் என்பதை சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம் இன்றி... வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப்போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான் இந்திரன். அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.

‘எனது ப்ரம்மஹத்திதோஷத்தில் ஒரு பங்கு இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயைகூர்ந்து ஏற்றுக்கொண்டால் பழையபடி இந்திரனாகிவிடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான் இந்திரன்.

“எங்களுக்கென்ன தருவாய்?”

“கேட்டதை தருகிறேன்...”“அப்படியானால்... நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும் வரை எங்கள் புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு...’- என வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள்.

மனிதனை தவிர மற்ற விலங்குகளில்... கர்ப்பம் தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது. மனிதர்களில்தான் பிரசவத்துக்கு முன்புவரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது.

இந்திரனும், பிரசவத்துக்கு குறிப்பிட்ட காலம் முன்புவரை பெண்கள் தங்கள் புருஷனோடு தேகஸம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான்.

கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும் வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான்.இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.

இந்த இடத்தில்தான் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும். தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா?

அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

அதனால்தான் அந்த மூன்று நாள்களை பகிஷ்டை என்றே சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டார்கள். அதாவது... வெளியில் வை... விலக்கி வை... ஒதுக்கி வை என்று இதற்கு அர்த்தம்.

பிராமணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி கொலைக் குற்றத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதனால் அவள் தோஷம் பிடித்தவள் என்றது வேதம்.

அதாவது... இயற்கை பெண்ணின் உடலில் நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி... அது ஒரு கற்பனைக் கதையோடு தொடர்புபடுத்தி அந்த நாள்களில் பெண்களை ஒதுக்கி வைத்து துன்புறுத்தி இருக்கிறது வேதம் வகுத்த விதி.

ஒரு பக்கம் இப்படி பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்...

இன்னொரு பக்கம் அழகிப் போட்டியே நடத்தியிருக்கின்ற தென்றால் பாருங்களேன். அதாவது இன்று மிஸ் வேர்ல்டு என்று சொல்வதைப்போல ‘மிஸ் வேதா’ என்று வேண்டுமானால் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.அந்த அளவுக்குப் பெண்களை அழகுப் பதுமைகளாக முன்மொழிந்து வழிமொழிகிறது. வேதகாலம் எப்படி? இப்படித்தான்.

“யதாஷனவ யோஹாஹாஸ்வர்ணம் க்ரணியம் பேசலம்விப்ரதீ ரூபானி ஆஸ்தி...”

வேதகால விதிகளில் பெண்கள் எப்படி நடந்து வந்தார்கள் தெரியுமா?முழுக்க முழுக்க தங்க நகைகள், ஆபரணங்கள் அணிந்து... மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பதுபோல நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி ஜொலிக்கிற தென்றால்... ஜலத்தில் துளியளவில் நெய் பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ... அதேபோல, தங்க ஆபரணங்களை தாங்கி வரும் பெண்ணும் ஜொலிக்கிறாள் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.

இந்த அழகு மட்டும்தானா? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா? “சுப்ராஹா கன்யாஹா யுவதயஹாசுபேஷசஹா கர்மகிருதஹாசுகிர்தாஹா வீர்யாபதிஹி...”பெண்ணானவள் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம்.

அடுத்தவர்களை கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடியவள். எக்கச்சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள். எப்போதும் துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.

எதிர்காலத்தைப்பற்றி கவலை கொண்டு அதற்கேற்றவாறு வாழ்க்கையை நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம்விட உடல், உள்ளம் இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குத்தான்.என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது அந்த ஸ்லோகம்.

சரி சரி... தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்... வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும்போது பெண்களை எப்படி நடத்தியது? ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம். சோம யாகம். கிட்டத்தட்ட நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லாரும் இக்கால நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன்.

யாகம் நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஒரு கணம் யோசித்தார்கள். ‘அம்மா... நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது, முகத்தை மூடிக்கோங்கோ...’ என பெருங்குரலில் ஆணையிட்டனர்.

உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலை தலைப்பை எடுத்து ‘காதுகளோடு முகத்தை மூடிக்கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்...?

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது.

அதற்காகத்தான். சில வருடங்களுக்கு முன் திருச்சூரில் நடந்த நிகழ்வு இது. வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால் காட்ட முடியும்.

ஆனால்...இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்த யாகம்... வேத காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால நிகழ்வைச் சொன்னேன்.

வேதகால பெண்களின் தேக லட்சணம் யாக லட்சணம் எல்லாம் பார்த்தோம்... அன்று கல்யாணம் எப்படி? முதல் மணமகள் யார்? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.


பகுதி 37. மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?


பகுதி 39.விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

2 comments:

  1. ஒரு பாமரன் மிகுந்த பக்தி கொண்டவன் கடவுள் மீது, உங்களின் கட்டுரைகள் உண்மை வெளி கொணரும் விதத்தில் நல்லது, அதே சமயத்தில் எனது கடவுள் பக்திக்கு முற்று புள்ளி வைத்து விடும் வாய்ப்பு உள்ளதாக உணருகிறேன். அதே போல் பல உலகுக்கு தெரியாத உணமைகளை தெளிவாக எழுத்துருவில் வெளி கொணரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் செந்தில்குமார்.

    ReplyDelete