ராமானுஜர் எப்படிப்பட்டவர்? பௌத்தம்...புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார்.மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க,,.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 32
மதுரை பெரிய ஆதீனம் உரிமைப் பிரச்சினை கிளப்பியதும், அதை மகாபெரியவர் சங்கராச்சாரியார் மறுத்ததும், ‘மடங்களுக்கான அமைப்பு’ மேலும் செயல்படுவதில் தடங்கலை ஏற்படுத்தியது. சில வருடங்களில் அமைப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.
சேற்றிலிருந்து பறித்து வந்த செந்தாமரைகள் போல வேததர்ம சாஸ்திர பரிபாலனசபை, ஆகமசிற்ப சதஸ், திருப்பாவை... திருவெம்பாவை மாநாடு, மடங்களுக்கான அமைப்பு... என சமய ஒற்றுமைக்காக மகாபெரியவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் எல்லாம் அவருடனேயே போய்விட்டன.
அவரது காலத்திற்குப் பிறகு மடத்தில் இந்த ஸ்தாபனங்கள் பற்றி கவலைப்பட, அக்கறைப் பட யாரும் இல்லை. அந்த செந்தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாடி... இப்போது சுண்டிச் சுருங்கிவிட்டன.
மகாபெரியவர் என்ற மகாபுருஷரோடு என்னுடைய அனுபவங்களை சிலபல அத்தியாயங்களில் படித்திருப்பீர்கள். ஆதிசங்கரரில் ஆரம்பித்து மகாபெரியவருடனான அனுபவங்கள்வரை பகிர்ந்து கொண்டாயிற்று. இப்போதைய சங்கராச்சாரியாருடனான சிலவற்றை தக்க சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்து...?
அடுத்து உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப் போகிறவர் ஆதிசங்கரரின் அத்வைதம் மீது வேதாந்த ஆயுதம் பாய்ச்சியவர்! அவர் யார்?
அதற்கு முன்...சோழச்சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் தனயன் ராஜேந்திரசோழன்... தன் தந்தையின் வெற்றிகளைக் கண்டு பூரித்துப்போனதோடு மட்டுமல்ல... அப்பாபோல நாமும் இந்த தரணி வெல்லவேண்டும். நம்மை பலரும் பரணி பாடவேண்டும். தந்தை தஞ்சையில் கட்டிய கோவிலைப் போன்றே தானும் கட்டவேண்டும் என நெஞ்சுக்குள் வேட்கையை வெறியாக எரியவிட்டான். விளைவு?
படைகளை கிளப்பினான். திக்கெட்டும் வெல்லப் புறப்பட்டவன். வடஇந்தியாவை நோக்கிப் படையெடுத்தான் பலநாட்கள். கடந்த அவனது படை கங்கை கரையை முட்டியது. கங்கை கொண்ட சோழன்... அங்கே ஒரு வேத விற்பன்னரை சந்தித்தான்.
அவரது சாஸ்திர விளக்கங்கள் அறிவு சார்ந்த கருத்துக்களைக் கேட்ட ராஜேந்திர சோழன்... ‘இந்த வித்வானை நம்முடன் அழைத்துச் சென்றால்தான் வெற்றிமுழுமைப்படும்’ என்ற முடிவுக்கு வந்தான். அவர்தான் நாதமுனி இன்றும் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நாதமுனியின் உபதேசத்தைப் பின்பற்றுகிற ‘நாதபந்துக்கள்’ என்ற பிரிவினர் வாழ்ந்து வருகிறார்கள்.
நாதமுனியை மிகுந்த மரியாதையோடு தென்னகம் அழைத்து வந்த ராஜேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரம் அமைத்ததோடு... நாதமுனியை தனது ராஜ ஆலோசகராக... உபதேசம் செய்பவராக வழிபட்டான்.
சோழனுக்கு உபதேசங்கள் செய்ததோடு... பல வேத நூல்களையும், உபநிஷதுகளையும் ஆழ்ந்து கற்ற நாதமுனியை வேதமுனி என்றே சொல்லலாம். பல ஸ்லோகங்கள் பண்ணிய நாதமுனியின் பேரன்தான் ஆளவந்தார்.
நாதமுனியின் பரம்பரைக்கும், சோழ ராஜாக்கள் பரம்பரைக்கும் தலைமுறை தாண்டிய சம்பந்தம் தொடர்ந்து ஆளவந்தாரும் தன் காலத்திய சோழ சாம்ராஜ்யத்துக்கு ராணுவ ஆலோசகராக அமர்ந்தார். சோழனின் யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு ஆலோசனை செய்யும் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருந்த ஆளவந்தாரை சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக தாத்தாவான நாதமுனி பலதடவை அழைத்தார்.
புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன் என பல தூதுவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் நாதமுனியின் உபதேசத்தை கேட்க மறுத்துவிட்டார் ஆளவந்தார்.இப்பேற்பட்ட ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான்... அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலைநம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜர் எப்படிப்பட்டவர் என உங்களுக்கு அறிமுகப்படுத்த ஓர் வடமொழி கவிதை எவ்வளவு தகவல்களை தேக்கித் தருகிறது பாருங்கள்.
“பாஷண்ட த்ருமஹண்ட தாவதகனாஹாசார்வாக சைலாஹனிஹிபௌத்த த்வாந்த்த நிராஸ வாஸரபதிஹிஜைனேப கண்ட்டீர வஹாமாயாவாதி புஜங்க பங்க கருடஹாத்ரைவித்ய சூடாமணிஹி...” என்று போகும் இந்த கவிதையின் கருத்து என்ன தெரியுமா?
அந்தக் காலத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்துக்கொண்டு பூசை செய்யும் ஒரு ‘பயம்’ தரும் வழிபாட்டுமுறை பரவிக்கிடந்தது. இப்படிப்பட்ட மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க காட்டுத்தீயாக வந்தவர்.
‘சார்வாகன்’ என்பவரின் உபதேசப்படி தெய்வமே இல்லை எல்லாம் மூடர்களின் கற்பனை மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள். தெய்வத்தை கும்பிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்... என்ற கொள்கை பிடிப்பில் வந்த நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.
பௌத்தம்...புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார். அந்த இருட்டை கிழித்து வேத வெளிச்சத்தை ஏற்படுத்திய உதயசூரியனாக வந்தவர். ஜைனம் என்னும் யானையை அடக்க சிங்கமாக புறப்பட்டவர்.
மாயாவாதம் என்னும் துன்பம் தருகின்ற கொடிய மலைப்பாம்பினை கொத்தி கொலை செய்யவந்த வைணவ கருடன்.
இப்படியாக மண்டையோட்டு வழிபாட்டு கலாச்சாரம், நாஸ்திக கூட்டம், பௌத்த இருட்டு, ஜைனம் என்ற யானை, மாயாவாதம், அதாவது ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் என்கிற மலைப்பாம்பு ஆகியவற்றை அடக்கி ஒடுக்க வந்தவர்தான் ஸ்ரீராமானுஜர்.இவர் என்ன சொன்னார்...? செய்தார்.? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 31.
கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...
பகுதி 33. ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். அதனால் அவர்களுக்கு மோட்சம் கிடையாது. பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது?
“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
No comments:
Post a Comment