இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

31. ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது..

பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...’

ஜலம் நிறைந்திருக்கிற குளத்துக்குள்ளிருந்து சேற்றின் சிக்கல்களை கால்களால் மீறி... தாமரைப் பூவை பறித்து... பாசிபடிந்த படிகளின் மீது பதமாக லாவகமாக ஏறி வழுக்கி விழாமல் பூவுக்கும் சேதாரம் ஏற்படாமல் மேலே வந்த ஒருவன்...

அத்தாமரை மலரை தெய்வத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறானே... அதேபோலத்தான் சங்கராச்சாரியார் கஷ்டப்பட்டு ‘மடங்களுக்கான அமைப்பு’ என்னும் மலரை எடுத்து வந்தார். மலர் வாடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 31

யோசித்தோம். மடங்களுக்கான அமைப்பை கஷ்டப்பட்டு உண்டாக்கிய பிறகு அதை முறைப்படி பதிவு (Register) செய்தோம். இதற்காக அனைத்து மடங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து போட்டார்கள்.

நான் செகரட்டரி என்ற முறையிலும், பரகால மடத்தின் பிரதநிதி என்ற முறையிலும் கையொப்பம் போட்டேன். சங்கராச்சாரியார்கள் எந்த இடத்தில் தங்கள் கையொப்பத்தை போட நேர்ந்தாலும்... பெயரை எழுத மாட்டார்கள் ‘நாராயண ஸ்மிருதி’ என்று தான் கையொப்பம் போடுவார்கள். அஃது போல் மகாபெரியவரும் நாராயணஸ்மிருதி என கையொப்பம் போட்டார்.

அமைப்பு, லெட்ஜரில் பதிவாகிவிட்டது. மக்கள் மனதில் பதிவாக வேண்டுமே, அப்படியென்றால் தனம், செல்வம் சேர்க்கவேண்டுமே.

மகாபெரியவருக்கு செல்வத்தின் மீது பணத்தின் மீது கொஞ்சம் கூட ஆசை கிடையாது. செல்வமோ, நகையோ அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மடத்தில் அன்று நானும் இருந்தேன். வடநாட்டுத் தொழிலதிபர் பிர்லா அன்று மகா பெரியவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். எத்தனை தொழிற்சாலைகளை நிருவகித்துக் கொண்டிருப்பவர். சாதாரணமாகவா வருவார்?

ஒவ்வொரு நிலையிலும் படாடோபம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.வெள்ளித்தட்டு முழுக்க புதுபுஷ்பம் கமகமத்தது. இன்னொரு வெள்ளித்தட்டில் ரகம் ரகமாய் பழங்கள். அடுத்தாக ஒரு வெள்ளித்தட்டு அதன் மேல் கட்டுக்கட்டாய் பணம்... மூன்றாவது தட்டு முழுதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பணம்.

பிர்லா... மகாபெரியவரை தரிசித்துக் கொண்டிருக்கும்போதே அவருடன் வந்தவர்கள் அந்த தட்டுகளை மகாபெரியவர் முன் அர்ப்பணிப்பதற்காக எடுத்து வந்தார்கள்.

புஷ்பத்தட்டை பார்த்த மகா பெரியவர் புன்னகைத்தார். பழத்தட்டை பார்த்ததும் புன்னகைத்தார். மூன்றாவதாக அந்த பணத்தட்டு வருவதை பார்த்துவிட்ட உடனேயே..பிர்லாவை கூப்பிட்டு... ‘என்ன இது’ என்ன இது? என்றார் அவசரமாய்.‘ஸ்வாமிஜி... மடத்து காரியங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை...’ என பிர்லா இழுக்க...

மகாபெரியவரோ சட்டென அந்த தட்டை தூக்கி பார்த்து வெளியே போய் விடுங்கள்’ என்று பொருள்படும்படி கைகளால் சைகை காட்டி விட்டார். பிர்லா எவ்வளவோ சொல்லியும்...’நான் சந்நியாசி... எனக்கே இவ்வளவு பணம் தேவைப்படுமானால்... லோகத்தில் சம்ஸாரிகளாக இருப்பவர்களுக்கு எவ்வளவு தேவைப்படும். அவர்களிடமே கொடுங்கள். பொது காரியத்துக்காக லோக சேமத்துக்காக மடத்துக்கு வெளியே செலவழித்து விடுங்கள்’ என மென்மையாய் மறுத்துவிட்டார் மகாபெரியவர்.

‘அர்த்தம் அனர்த்தம்’ என்ற ஆதிசங்கரரின் கூற்றுக்கு எவ்வளவு உண்மையாக மகா பெரியவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அப்போது அங்கே நான் பார்த்தேன். இப்படிப்பட்ட மகா பெரியவர் மடாதிபதியாக இருந்த மடத்தில் செல்வத்துக்கு அதிகம் வேலையும் இல்லை. தேவையுமில்லை. அதனால் மடங்களுக்கான அமைப்பை ஆரம்பிப்பதிலிருந்து... ஆதீனங்கள் ரொம்ப உதவிகள் செய்தார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் உண்டு. அதுபோல மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு.இவற்றை முறைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள... ஒரு திட்டம் தீட்டினோம். அதாவது... மடங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை வருஷத்துக்கொரு தடவை ‘மடங்களுக்கான அமைப்பு’க்காக கொடுக்கவேண்டும். இந்த நிதியில்தான் அமைப்பு இயங்க வேண்டும்.

இந்த செல்வம் மூலம்... நமது மதத்தில் நிலவும் பிரிவுகளைத் தாண்டி ஒரு பொதுவான ஆன்மீகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என நாங்கள் திட்டம் போட்டோம்.

இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க... அமைப்பின் கூட்டத்தையும் கூட்டினோம். இதில் மகாபெரியவர் தலைமையேற்பார். மற்ற மடங்களின் மடாதிபதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வருஷா வருஷம் கூட்டம் நடந்தது. ஆனால்... சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 சதவிகித பங்கை கொடுக்க முன்வரவில்லை.கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. 5 வதோ, 6வது கூட்டமோ...

அதில்தான் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையை கிளப்பினார்.

கோவில்களை கட்டியது மன்னர்கள், அதற்கு உதவி செய்தது... உழைப்பு கொடுத்தது... வியர்வை கொடுத்தது.. வீர்யம் கொடுத்தது. கல் சுமந்தது மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா?
வடநாட்டில் குறிப்பாக காசியில் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல... இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்.”என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துகளை பேசினார்.

சொன்னதோடு இல்லை. தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியத்தில் கோவிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தை கோவிலுக்கு வெளியே வைத்து... அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில்... மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...’ என்றார் மகா பெரியவர் - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 30. மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சி. ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன

பகுதி 32. நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.

1 comment:

  1. சங்கராச்சாரியார் என்ன சொன்னாலும் யார் ஏத்துக்கோணுமோ அவர் ஏத்துப்பார்.

    ReplyDelete