பகுதி 30. மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சி. ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.
வர்ணாஸ்ரம தர்மத்துக்குட்பட்டு ஜனங்களை ஒற்றுமையாக (!) வாழவைக்கவேண்டும் என மடாதிபதி என்ற முறையில் பல காரியங்களை செய்தார் சங்கராச்சாரியார்.ஆனால், மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய மடங்களே சண்டையிட்டுக் கொண்டு... ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.
வைஷ்ணவ மடங்கள்-சைவ மடங்கள், பிராமண மடங்கள், பிராமணர் அல்லாத மடங்கள் இப்படி மடங்களுக்கிடையே முட்டல், மோதல்கள் மூண்டபடி இருந்தன. ‘கும்பகோண’ மடத்துக்கும், சிருங்கேரி மடத்துக்கும் சகோதரச்சண்டை என்று ஆன்மீக வட்டாரத்திலேயே அழுத்தமான பெயர் உண்டு.
இங்கே இப்படியென்றால்... நம்மூர் மடங்களை ஏதோ புழுபூச்சி போல பார்த்து வந்தார்கள் வட இந்திய மடக்காரர்கள். காரணம், தமிழ்நாடு திராவிடதேசம், சூத்திரதேசம் என்பது அவர்கள் வாதம். இன்னொன்றாக, கும்பகோண மடம் உண்மையான சங்கரமடம் இல்லை என வட இந்தியாவிலுள்ள சங்கர மடாதிபதிகளே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மகாபெரியவர் சங்கராச்சாரியார் யாத்திரை மேற்கொண்ட போது... அவர் காசிக்குள்ளேயே வரக்கூடாது’ என்றெல்லாம் அவர்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்தனர்.
சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என அழைக்கக்கூடாது. அவர் ஜெகத்குரு அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர் குருவே அல்ல. பின் எப்படி “ஜெகத்குரு” ஆகமுடியும்?-என்றெல்லாம் வட இந்தியாவிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் ஏகத்துக்கும் கிளம்பின.
இதுபற்றி சங்கராச்சாரியாரிடமே கேட்டபோது அவர் சொன்னார்.‘என்னே ஜெகத்குரு என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. சொல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டதில்லை. “ஜெகத்குரு” என்றால் என்ன அர்த்தம் தெரியுமோ? ஜெகம்தான் எனக்கு குரு அதாவது லோகம்தான், உலகம்தான் எனக்கு குரு நான் குருவல்ல என பதில் சொன்னார் மகாபெரியவர்.
இப்படியாக உள்ளூரிலிருந்து, தேச அளவில் மடங்கள் முஷ்டி உயர்த்திக் கொண்டு நின்ற சூழலில்.. எந்த மடாதிபதிக்கும் வராத யோசனை மகாபெரியவருக்கு வந்தது.
“மடங்கள் மடத்தனமா சண்டை போட்டுண்டிருக்கா தேஸத்துல இருக்குற எல்லா மடங்களும் ஒரே அமைப்பா வரணும். அது மூலமா... மதவிஷயங்களை, மனு தர்மத்தை இன்னும் வேகமா கொண்டு போகணும்” என என்னிடம் கூறிய மகாபெரியவர்...நான் அடிக்கடி வட இந்தியாவில் யாகங்கள் மதப் பிரச்சாரக் கூட்டங்கள் என சென்று வந்து கொண்டிருந்ததால்.. வட இந்திய மடங்களிடம் பேசி மடங்களுக்கான அமைப்பை உருவாக்க என்னை அங்கே போகச் சொன்னார்.
அயோத்தியில் எக்கச்சக்க மடங்கள் இருக்கின்றன. இதுதவிர பூரி, துவாரகா, பத்ரி போன்ற சங்கரமடங்களுடனும் பேசினோம், சின்னச்சின்ன மடங்களைகூட விட்டுவைக்காமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினோம்
‘Association of Mutts’ என்ற பெயரில் மடங்களுக்கான அமைப்பை சங்கராச்சாரியார் உருவாக்க முனைவதையும், இதற்கான காரியங்கள் நடைபெற்று வருவதையும் கேள்விப்பட்ட குல்ஸாரிலால் நந்தா குறுக்கே வந்தார்.
குல்ஸாரிலால் நந்தா.. வட இந்திய காங்கிரஸ் தலைவரான இவர், நேருஜி காலமான போதும், லால்பகதூர் சாஸ்திரிஜி காலமானபோதும் இரண்டு முறை பாரதத்தின் இடைக்கால பிரதம மந்திரியாக இருந்தவர் அவ்வளவு பெரியவரான அவர்... ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை இணைக்க முயற்சிப்பதை விரும்பவில்லை.
நாங்கள் வக்கீல்களை வைத்து... மடங்களை ஒரு குடையில் ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை தனது அரசியல் செல்வாக்கால் முடக்கிப்போட்டு விட்டார் குல்ஸாரிலால் நந்தா.
எந்த மடத்துக்காரர்களும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை காரணம்... ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை ஒருங்கிணைத்து விடுவாரோ என்ற பயத்தில்... நந்தா வட இந்தியாவில் உள்ள மடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘சாது சம்மேளன்’ என்றொரு அமைப்பை தோற்றுவித்து விட்டார்.சங்கராச்சாரியாருக்கு இத்தகவலை தெரிவித்தேன்.
“பாரதம் பூரா ஒண்ணு சேக்கலாம்னு நெனைச்சேன். அவா பேதம் பாக்குறாளா? சரி... நாம இங்கேயே இருக்கிற மடங்களை சேத்து அஸோஸியேஷன் ஆரம்பிச்சிடலாம்” என சொல்லிவிட தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சியை தொடங்கினோம்.
உடுப்பியில் 8 மடங்கள் இருந்தன. அவர்களிடம் பேசிப் பார்தோம். சங்கராச்சாரியார் எடுக்கும் எந்த முயற்சிக்கும், செய்யும் எந்த காரியத்துக்கும் சிருங்கேரி மடத்துக்காரர்கள் எதிராகத்தானே இருப்பார்கள். அவர்களைத் தவிர பல மடங்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால்... வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களும் பின்வாங்கிவிட்டார்கள்.
கடைசியில்... தமிழ்நாட்டு அளவில் இருக்கிற அத்தனை மடங்களையும் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். சங்கராச்சாரியார் மதுரை ஆதீனம், திருவாடுதுறை, திருப்பனந்தாள், தர்மபுரம் என மற்ற மடத்தின் ஆதீனங்களோடு பேசி அனைவரையும் ஒன்று சேர்த்தார்.
இந்திய அளவில் முயற்சித்து... அது குல்ஸாரிலால் நந்தாவால் தடுக்கப்பட்டுவிட்டது. சரி... தென்னிந்திய அளவில் மடங்களை இணைக்கலாம் என்ற மகாபெரியவரின் முயற்சி சிருங்கேரி கைங்கரியத்தாலோ என்னமோ முடங்கிப் போனது.
கடைசியில் தமிழ்நாட்டில் உள்ள மடங்களை மட்டும் இணைத்த சங்கராச்சாரியார் Association of Mutts ஆரம்பித்தார். நான், செகரட்டரி ஆனேன். சங்கராச்சாரியார் மடங்களுக்கான அமைப்பின் தலைவரானார். - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 29. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!! ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...
“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
No comments:
Post a Comment