பகுதி 27. கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.செட்டிநாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகாபெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பாவை மாநாடு சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.
அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.
ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்...?அதற்குப் பரிகாரம் தான் சம்ப்ரோக்ஷணம். அதாவது கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.
“சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை (Common God) கண்டுபிடிக்கணும் தாத்தாச்சாரீ” என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகாபெரியவர் பிராமணர் - பிராமணர் அல்லாதவர், சைவ - வைணவ துவேஷங்களை தீர்த்து வைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.
அரசியல் கட்சி மாநாடு அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தைக் கூட்டியது. மார்கழி மாதம் முழுதும்... தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை - திருவெம்பாவை உபன்யாசங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களைத் தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.
பின்... விசேச மேடை தயார் செய்து அதில் ஆண்டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை - திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.
எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக்கொள்வோம். கிடைக்காத பட்சத்தில் படங்களை பயன்படுத்துவோம்.
கோயில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது... நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக்கொண்டு வர முடியும்? ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் கையைப் பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?
என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம்.பாவை மாநாடு - வெற்றிகரமாக - விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்... இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார்.
மகாபெரியவரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு... அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரம்மாண்டம் பெற்றது. இதனால் மகாபெரியவருக்கு அரசியல் முக்கியத்துவமும் ஏற்பட்டுவிட்டது.
பாவை மாநாடா? நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே... என பிராமணர்கள் பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள்.
நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ? தமிழ்நாடு முழுவதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக்களிலும் மார்கழி மாதம் முழுவதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக...மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம்.
இந்தப் பக்கம் ஆண்டாள்... பக்கத்தில் மாணிக்கவாசகர். வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர்.
‘ஸ்வாமி... என்ன இப்படி பண்ணிட்டேள்?’ என மொட்டையாக ஆரம்பித்தார். ‘எதை எப்படி பண்ணிட்டேன். விவரமா சொல்லுங்கோ...’ என நான் பதில் உரைத்தேன்.
‘தெரிஞ்சுண்டே கேக்கறீளே...?’ மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர். “தீட்சிதரே... என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?” மறுபடியும் உரைத்தேன். தீட்சிதர் அப்போது தான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.
“பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே.... ஆண்டாள் யாரு? மாணிக்க வாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?”
மன்னார்குடி வாழ் சில கண்களின் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது. இதுக்குத்தான் இவ்ளோ நேரம் இழுத்தேளா? இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ... சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல... இப்படி இது அரசாங்கம் நடத்துறா... அவாள்ட்ட போய் கேளும்...” என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன்.
தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.
மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால்... இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு...சைவ - வைணவ - பிராமணர் - பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையைகூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.
ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.ஆகமம் எப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?
“த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே...”என்று போகிற பாஞ்சாத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்...பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.
இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.
அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.
பகுதி 26. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.
பகுதி 28. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது. ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..
super nach nu iruku
ReplyDelete