தமிழில் பேசினால் தீட்டு கழிய ஸ்நானம் பண்ணணும்.
அதென்ன ஆஹம சிற்ப சதஸ்? ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.
விக்ரகங்களை... தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும் கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.
சிற்பம்? இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு. நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.
இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.
ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது? கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம். பூஜாதத்துவ பிரச்சாரம். இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில் தான் கூட்டம் நடக்கும். கோபுரத்தின் அழகு. பிரகாரங்களின் அழகு. மதில் சுவர்களின் அழகு. கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.
இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னது போல நான் உங்களிடமும் சொல்கிறேன்.
“ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை ‘விஸ்வகர்மா’வாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம்.
அதனால் சிற்பங்கள் எல்லாம் ‘விஸ்வகர்மா’வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்” என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம்.
நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம். இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது. சனாதன தர்மசபையில் ஆரம்பித்து... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.
திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். “ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம்.
ஆனா... பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...” என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.
நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?
ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே!
ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?”
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
“இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும். ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?” என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.
அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான்.
அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?” என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்...” என்றேன்.
அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை. உங்களுக்கு...?--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 24. பெரியாரின் பரபரப்பு பிரசாரம். பிராமணிய பலத்துக்காக யாகம்.
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
ReplyDeleteதமிழ்
ஆங்கிலம்